சாமி தரிசனம்
சென்னிமலை அருகே நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பங்குனி மாதம் நடைபெறும் 2-வது திங்கட்கிழமையான நேற்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்;
சென்னிமலை அருகே ஊத்துக்குளி ரோட்டில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி முதல் திங்கட்கிழமையான கடந்த வாரம் அதிகாலை 12.15 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்கியது. இதில் நள்ளிரவு முதல் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் 2-வது திங்கட்கிழமையான நேற்று அதிகாலை 4 மணி முதல் திரளான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக இந்த வாரமும் சென்னிமலை மற்றும் ஊத்துக்குளி ஆகிய இடங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவில் வளாகத்தில் ஏராளமான தற்காலிக கடைகளும் அமைக்கப்பட்டு இருந்தது. பக்தர்களுக்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கைத்தமலை முருகன் கோவில் செயல் அலுவலர் பிரேமா மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.