காவேரிப்பாக்கம்: தெரு நாய்கள் கடித்து மாணவனுக்கு காயம்!
தெரு நாய்கள் கடித்து மாணவனுக்கு காயம்!;
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி கவரைத் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 35), பூ வியாபாரி. இவரது மூத்த மகன் தமிழரசன் (9). ஊராட்சி ஒன்றிய தெற்கு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். தமிழரசன் பக்கத்து தெருவில் உள்ள கடைக்கு சென்று விட்டு வந்துள்ளான். அப்போது தெருவில் சுற்றித்திரிந்த தெருநாய்கள் கூட்டாக சேர்ந்து தமிழரசனை திடீரென கடிக்க தொடங்கி உள்ளது. உடனே நாய்களிடமிருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடினான். ஆனாலும் நாய்கள் சிறுவனை சுற்றி வளைத்து கடித்துகுதறின. இதில் இடது கையில் பலத்தகாய மடைந்த தமிழரசன் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டான்.இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்து நாய்களிடம் இருந்து சிறுவனை மீட்டு, வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தெருநாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.