குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ளஅருமநல்லூர் பகுதியில் கடந்த 35 ஆண்டுகாலமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் அரும நல்லூர், ஞாலம், சிறமடம், வீரவநல்லூர்,தெரிசனங்கோப்பு, கடுக்கரை, காட்டுப்புதூர், தெள்ளாந்தி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிகிச்சைபெற்று வந்தனர்24 மணிநேரமும் இந்த மருத்துவமனையில் மருத்துவர் இருந்து வந்த நிலையில் பிரசவத்திற்கு அதிக பெண்கள் வந்து சென்றனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக பழுதடைந்த காரணத்தினால் இக்கட்டிடத்தில் மின்கசிவு ஏற்பட்டு இங்கிருந்த மருந்துகள் பாதுகாக்கும் பெட்டி, ஐ.ஆர்.எல். உள்ளிட்ட சாதனங்கள் எரிந்து நாசமானது. இதைத்தொடர்ந்து இப்பகுதியில் மருத்துவமனை செயல்படுவது நிறுத்தப்பட்டது. செவிலியர் தங்கும் விடுதியில் இம்மருத்துவமனை தற்போது செயல்பட்டு வருகிறது. அங்கு சிகிச்சை அளிக்க உரிய வசதிகள் இல்லாததால் பிரசவத்திற்கு பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. மேலும் மருத்துவரோ, செவிலியர்களோ தற்போது சரிவர வராத நிலையில் இங்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை பெற முடியாமல் இவர்கள் பல கி.மீ பயணம் செய்து தடிக்காரன்கோணம் அல்லது பூதப்பாண்டி பகுதிக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முதியோர்கள் கடும் சிரமத்தில் ஆளாகின்றனர். எனவே இந்த அரசு மருத்துவமனையை கிராம மக்கள் இன்னலை போக்கிடும் வகையில் செயல்படுத்திடவும், நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதை போக்கிடவும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரி வருகிறார்கள்.