பொதுச்செயலாளர் பதவியிலிருந்து இபிஎஸ் தானாகவே விலகிக் கொள்வதே மரியாதை: ஓபிஎஸ்
பொதுச்செயலாளர் பதவியிலிருந்து இபிஎஸ் தானாகவே விலகிக் கொள்வதே மரியாதை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.;

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பழனிசாமி தலைமையிலானவர்கள் தவறான பொதுக்குழுவை கூட்டி இருந்ததால், நாங்கள் அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் செல்லலாம் என்று முடிவு செய்தோம். தலைமை அலுவலகத்துக்கும், இந்தியன் வங்கிக்கும் இடையில், 8 மாவட்ட செயலாளர்கள் எங்களை வழிமறித்து, தொடர்ந்து செல்ல விடாமல் தடுத்தனர். நாங்கள் வந்த வாகனத்தை தாக்கி, ரகளை செய்தனர். இதுதான் நடந்த உண்மை. அவர்கள் எங்களைத் தாக்கியதுடன், அவர்களாகவே தலைமை அலுவலகத்துக்குள் புகுந்து, அடியாட்களை வைத்து, பொருட்களைச் சேதப்படுத்தினர். ஆனால், பழியை எங்கள் மீது போட்டனர். இவை அனைத்தும் காவல் துறையின் வீடியோ பதிவில் உள்ளது. கட்சியில் நான் மட்டும் இணைய வேண்டும் என்று கூறவில்லை. பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் அனைத்தும் ஒன்றாக இணைய வேண்டும் என்றுதான் தெரிவித்தேன். அவ்வாறு இணைந்தால்தான், தேர்தலில் வெற்றி பெற முடியும். இதை நான் திரும்பத் திரும்ப கூறிவருகிறேன். ஆனால், அதிமுக எந்தக் காலத்திலும் வெற்றி பெறக்கூடாது என்ற நோக்குடன் பழனிசாமி தரப்பினர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒற்றைத் தலைமை வந்தால் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறுவேன் என்று பழனிசாமி கூறினார். ஆனால், அவர் தலைமைக்கு வந்த பின்னர், ஒரு தேர்தலில்கூட வெற்றி பெறவில்லை. பழனிசாமி அவராகவே பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதுதான் அவருக்கு மரியாதை. இல்லையேல் அவர் அவமரியாதையை மட்டுமே சந்திப்பார் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.