மனித அறிவை மழுங்கச் செய்து சிந்திக்கும் திறனை அழிக்கும் போதைப் பொருள்களை ஒழிப்பது அனைவரின் கடமை
மனித அறிவை மழுங்கச் செய்து சிந்திக்கும் திறனை அழிக்கும் போதைப் பொருள்களை ஒழிப்பது அனைவரின் கடமை என பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவஹர் பேசினார்.;

அரியலூர், மார்ச் 30- மனித அறிவை மழுங்கச் செய்து, சிந்திக்கும் திறனை அழிக்கும் போதைப் பொருள்களை ஒழிப்பது அனைவரின் கடமை என்றார் பட்டிமன்ற பேச்சாளர் கவிதாஜவஹர். அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற கள்ளச்சாரயம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் அவர் கலந்து கொண்டு மேலும் பேசியது: போதைப்பொருள் பயன்பாடு மனித அறிவை மழுங்கச் செய்து சிந்திக்கும் திறனை அழித்து குடும்பம், சமூகத்தை தவறான பாதையில் இழுத்துச் சென்று விடுகிறது. இதனால் தனிமனித வாழ்வு சீரழிவதோடு நாட்டின் பொருளாதாரமும் சீர்குலைகிறது. திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் பெரும்பாலும் மது, போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் போதைப் பொருள்களை ஒழிப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ஆனாலும் போதைப் பொருள்களின் ஊடுருவல் வேரறுக்க முடியாத விருட்சமாய் வளர்ந்து வருகிறது. எனவே படிக்கும் மாணவர்கள் போதைப் பொருள்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.போதைப்பொருளை ஒழிப்பது என்பது அரசின் கடமை மட்டுமல்ல நமது ஒவ்வொருவரின் கடமையும் தான் என்றார். இந்த கருத்தரங்கிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா மல்லிகா தலைமை வகித்தார். மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முத்துகிருஷ்ணன், கோட்ட கலால் வட்டாட்சியர்கள் அரியலூர் தேவகி, உடையார்பாளையம் திருமாறன், துணை வட்டாட்சியர் சரவணன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மணிவண்ணன், பேராசிரியர்கள், மாணவ,மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.