உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
குளுகுளு காலநிலையை அனுபவித்து மகிழ்ச்சி;

உதகையில் நிலவும் இதமான கால நிலையை அனுபவிக்க வார விடுமுறை நாளான இன்று அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்... மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்றுள்ள மாவட்டமாகும். இம்மாவட்டத்திற்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம். குறிப்பாக உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை காண வருகை தருகின்றனர். இந்நிலையில் வார விடுமுறை நாளான இன்று உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் பூத்துள்ள மலர்கள், கள்ளிச் செடிகள் உள்ளிட்டவையை கண்டு ரசித்தும், செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவித்தவாறு பூங்காவில் உள்ள புல் தரை மைதானத்தில் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தும், விளையாடியும் விடுமுறை நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.