முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டலத்திற்குட்பட்ட ஆச்சங்கரை வனப்பகுதியில் காட்டுத் தீ. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டம் ஆகும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. வறட்சியின் காரணமாக வனப்பகுதிகளில் உள்ள மரம், செடி, கொடிகள் என அனைத்தும் காய்ந்து கருகி காட்சியளிக்கிறது. கடும் வறட்சியின் காரணமாக வனப்பகுதிகளில் பாட்டுக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டலத்திற்குட்பட்ட ஆச்சங்கரை வனப்பகுதியில் திடீர் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த வனப்பகுதியில் காய்ந்த மூங்கில்கள் அதிக அளவில் உள்ளதால் தீ மள மளவென பரவி வருகிறது. காட்டுத் தீ குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ள நிலையில் அப்பகுதிக்கு விரைந்துள்ள வனத்துறையினர் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
