
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் கோவிலாகும். இங்கு கடந்த 2ஆம் தேதி மாசி கொடை விழா தொடங்கி 11ஆம் தேதி நள்ளிரவு ஒடுக்கு பூஜையுடன் விழா முடிந்தது. இதை எடுத்து 18 ஆம் தேதி எட்டாம் கொடை நடந்தது. தொடர்ந்து அம்மனின் பிறந்த நாள் என கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரமான இன்று 31-ம் தேதி மீனபரணி கொடை விழா நடக்கிறது. இதனை ஒட்டி இன்று அதிகாலை 4:30 மணிக்கு திருநடை திறப்பு, தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றன. காலை 9 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, தொடர்ந்து குத்தியோட்டம் மேலும் இரவில் அத்தழ பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலிய படுக்கை என்னும் மகா பூஜை ஆகியவை நடக்கிறது. பரணிக்கொடையான இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் மற்றும் கேரளாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக அரசு போக்குவரத்து கழகம் பஸ் வசதிகள் செய்து உள்ளது. இந்த வலியை படுக்கை பூஜை என்பது வருடத்தில் மூன்று நாட்கள் மட்டும் நடைபெறும் பூஜையாகும்.