அரசு பள்ளி தலைமைஆசிரியர் தற்காலிக பணிநீக்கம்
பெண் ஆசிரியரின் வீட்டை அபகரிக்க முயன்று வன்கொடுமை வழக்கில் சிக்கிய அரசு பள்ளி தலைமையாசிரியர் தற்காலிக பணிநீக்கம்;

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், நாகர்பாளையம் நஞ்சப்பா நகரை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி மனைவி பிரபா (48). இவர், கோபி அருகே வண்ணாந்துறைப்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். பிரபா கடந்த 2014ம் ஆண்டு குடும்ப செலவிற்காக, ஈரோடு சொட்டையம்பாளையத்தை சோந்த, ஈரோடு பெரியார் வீதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரான முத்துராமசாமி என்பவரிடம் வீட்டை அடமானம் வைத்து ரூ.15 லட்சம் கடன் பெற்றார். இதற்கான அசல் மற்றும் வட்டி என மொத்த பணத்தையும் பிரபா செலுத்தி உள்ளார். ஆனால், தலைமை ஆசிரியர் முத்து ராமசாமி, வீட்டை பிரபா பெயருக்கு எழுதி தராமல் வீட்டை அபகரிக்க முயன்றார். இதையடுத்து முத்துராமசாமி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி, அவரது ஆதரவாளர்களுடன் பிரபா வீட்டிற்கு சென்று வீட்டிற்குள் இருந்த பீரோ, கட்டில், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், பீரோவை சூறையாடினர். மேலும் பிராபாவையும் அவரது குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து பிரபா கோபி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி தலைமை ஆசிரியர் முத்து ராமசாமி உட்பட அவரது ஆதரவாளர்கள் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறையினர் விசாரணை நடத்தி, தலைமை ஆசிரியர் முத்து ராமசாமியை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.