பர்கூர் வனப்பகுதியில் எரிந்த நிலையில் வாலிபர் எலும்புக்கூடு கண்டெடுப்பு

சந்தன மரம் வெட்ட சென்றவர்கள் அடித்துக் கொன்றது அம்பலம் போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்;

Update: 2025-04-03 03:52 GMT
பர்கூர் வனப்பகுதியில் எரிந்த நிலையில் வாலிபர் எலும்புக்கூடு கண்டெடுப்பு
  • whatsapp icon
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, சின்னக்குத்தியை சேர்ந்தவர் சக்திவேல் (25). அதை பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்களான வெங்கடேஷ், ராஜேந்திரன், குமார் ஆகியோருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் பர்கூர்மலையில் உள்ள தட்டக்கரை, வனச்சரகம் போதமலை எம்மம்பட்டி பகுதிக்கு சந்தன மரம் வெட்ட சென்றுள்ளனர். இந்த நிலையில் வெங்கடேஷ், ராஜேந்திரன், குமார் ஆகி 3 பேரும் மீண்டும் ஊருக்கு வந்தனர். ஆனால் சக்திவேல் வரவில்லை. இதுகுறித்து சக்திவேல் குடும்பத்தினர் கேட்டபோது வெங்கடேஷ், ராஜேந்திரன், குமார் ஆகியோர் நாங்கள் பர்கூர் வனப்பகுதியில் மரம் வெட்டி கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு ஆளுக்கு ஒரு திசையில் ஓடி வந்து விட்டோம் என்றனர்.இதையடுத்து சக்திவேலின் தந்தை பர்கூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து தனது மகன் சக்திவேல் மாயமானது குறித்து புகார் அளித்தார். அதன் பேரில் பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல் மரம் வெட்ட சென்ற இடமான தட்டக்கரை வனப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் சக்திவேல் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தட்டக்கரை பகுதியிலிருந்து ஒன்னரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எம்மம்பட்டி வனப்பகுதியில் உள்ள ஒரு குட்டையில் மனித தலை மற்றும் எலும்பு கூடு இருப்பதை கண்டு வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த இடத்தில் பேண்ட் பெல்ட் பக்கில்ஸ் இருந்ததை போலீசார் கைப்பற்றினார். இதுகுறித்து சக்திவேலின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பெல்ட் பக்கில்ஸ் வைத்து இறந்து கிடந்தது தங்கள் மகன் சக்திவேல் என்பதை உறுதி செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சக்திவேல் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதை அடுத்து அவருடன் சென்ற ராஜேந்திரன் வெங்கடேஷ் ஆகிய இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீசார் கூறும்போது, சம்பவத்தன்று சக்திவேல், வெங்கடேஷ், ராஜேந்திரன், குமார் ஆகியோர் பர்கூர் மலையில் உள்ள தட்டக்கரை பகுதியில் சந்தன மரத்தை வெட்டிக் கொண்டிருந்தபோது அவருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மற்ற மூவரும் சேர்ந்து சக்திவேலை அடித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊருக்குள் வந்து தங்கள் மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக பர்கூர் மலைப்பகுதியில் துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தாங்கள் தப்பி வந்து விட்டதாகவும் கூறியுள்ளனர். இந்நிலையில் சக்திவேல் எலும்பு கூடை மீட்ட தடயவியல் ஆய்வாளர்கள் அதை சேகரித்து பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது வெங்கடேஷ் ராஜேந்திரன் ஆகியோர் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். குமார் என்பவர் தலைமறைவாகிவிட்டார். கொலைக்கு மூளையாக அவர்தான் செயல்பட்டு உள்ளார். அவரைப் பிடித்தால் தான் கொலைக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் தப்பி ஓடிய குமாரை பிடிக்க அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தனிப்படை போலீசார் கிருஷ்ணகிரி விரைந்துள்ளனர்.

Similar News