கோவை: வெயிலால் தாகம் தணித்த யானைகள் - காகத்தால் அதிர்ச்சி!
கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வனவிலங்குகள் தண்ணீர் தேடி அலைந்து வருகின்றன.;

கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வனவிலங்குகள் தண்ணீர் தேடி அலைந்து வருகின்றன. வனத்துறையினர் வனப்பகுதிகளில் தொட்டிகள் அமைத்து தண்ணீர் நிரப்பி வருகின்றனர். எனினும், உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக யானைகள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விளைநிலங்களையும், கால்நடைகளுக்கான தீவனங்களையும் நாசம் செய்து வருகின்றன. இந்நிலையில், தடாகம் பகுதியில் உள்ள பொன்னூத்து அம்மன் கோவில் அருகே வனத்துறையினர் அமைத்த தண்ணீர் தொட்டியில், நேற்று குட்டிகளுடன் மூன்று யானைகள் தண்ணீர் அருந்த வந்தன. அப்போது அங்கு வந்த ஒரு காகம் தொட்டியின் மேல் அமர்ந்தது. இதைக் கண்ட யானைகள் அச்சமடைந்து பின்வாங்கின. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெரிய உருவம் கொண்ட யானைகள் காகத்தைக் கண்டு அஞ்சிய சம்பவம் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வனத்துறையினர் யானைகளுக்கு தேவையான தண்ணீர் வசதிகளை செய்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.