நஷ்ட ஈடு வழங்க விவசாயி கோரிக்கை

தாளவாடி அருகே நள்ளிரவில் தோட்டத்துக்குள் புகுந்து தென்னகன்றுகளை சேதப்படுத்திய யானைக் கூட்டங்கள்;

Update: 2025-04-04 04:44 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் காரணமாக வறட்சியான சூழ்நிலை நிலவுகிறது. வனப் பகுதியில் உள்ள நீர்நிலைகள் குளம் குட்டைகள் வரண்டு போக தொடங்கியுள்ளது. இதனால் வனவிலங்குகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு தண்ணீருக்காக கிராமத்துக்குள் புகுவது தொடர்கதை ஆகி வருவது. குறிப்பாக யானைகள் சமீப காலமாக வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். தாளவாடி அடுத்த மல்லன் குழி என்ற வனப்பகுதி கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பன். இவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் நூற்றுக்கணக்கான தென்னங்கன்றுகளை நட்டி வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு வனப்பகுதி விட்டு வெளியேறிய யானை கூட்டங்கள் மாதப்பன் தோட்டத்திற்குள் புகுந்து தென்னகன்றுகளை மிதித்து சேதப்படுத்தியது. 30 தென்ன கன்றுகளை பிடுங்கி மிதித்து சேதப்படுத்தி உள்ளது. பின்னர் அந்த யானை கூட்டம் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இன்று காலை தோட்டத்திற்கு வந்த மாதப்பன் தென்னகன்றுகள் சேதம் அடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவருடைய தோட்டத்தில் யானை சாணங்கள் ஆங்காங்கே கிடந்தன.இதுகுறித்து ஜீரகல்லி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது விவசாயி மாதப்பன் சேதம் அடைந்த தென்னங்கன்றுகளுக்கு நஷ்ட ஈடு வாங்கி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதேசமயம் மீண்டும் யானைக் கூட்டங்கள் கிராமத்துக்குள் வரக்கூடும் என்பதால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.

Similar News