ஆன்லைனில் வரி செலுத்த முடியாமல் மக்கள் தவிப்பு
ஆன்லைனில் வரி செலுத்த முடியாமல் பொதுமக்கள் தவிப்பு நாளை முதல் இணையதளம் செயல்படும் என அதிகாரிகள் விளக்கம்;
ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 4 மண்டலங்களாக பிரித்து மண்டலம் வாரியாக சொத்துவரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு வரிகள் வசூல் செய்யப்படுகிறது. அதன்படி, மாநகராட்சியில் 2024 - 2025 ஆம் நிதியாண்டுக்கான வரி வசூலில், 81.58 சதவீதம் பெற்று, தமிழக அளவில் 3ம் இடத்தை பிடித்துள்ளது. மேலும், 2025 2026ஆம் ஆண்டுக்கான சொத்து வரியை வரும் 30க்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், ஈரோடு மாநகராட்சியில், கடந்த 1ம் தேதி முதல் ஆன்லைன் முறையில் சொத்து வரி உள்ளிட்ட இதர வரிகளை செலுத்த முடியாமல், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இணையத்தில் ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்த முயன்றால் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களையே பதிவு செய்ய முடியில்லை. ஆன்லைன் சர்வர் பழுது, ‘லிங்’ ஓப்பன் ஆவதில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேரடியாக வரி வசூல் மையங்களுக்கே சென்றால், முதியவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், தற்போது, வரிவசூல் மையங்களில் உள்ள சர்வரும் பழுதடைந்துள்ளதால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியதாக உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது : தற்போது 2025- 2026ஆம் நிதியாண்டு தொடங்கியிருப்பதால், அதற்கான வரியினங்கள் தொடர்பான ஆவணங்கள் கணிணி மற்றும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வரப்படுகிறது. இதற்கான பணியில் வரி வசூல் மையப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மாநகராட்சியில் உள்ள பொதுமக்கள், ஆன்லைனில் வரி செலுத்துவதில் சிக்கல் உள்ளது. ஆவணங்கள் ஏற்றும் பணி இன்றுடன் ( 4ம் தேதி) நிறைவடைந்து விடும். நாளை ( 5ம் தேதி) வழக்கம் போல், 2024- 2025ஆம் ஆண்டிற்கான நிலுவை வரிகளையும், 2025 2026 ஆம் ஆண்டிற்கான வரிகளையும் பொதுமக்கள் செலுத்தலாம். இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்