ஈரோட்டில் குடிநீர் திருட்டை தடுக்க புதிய முயற்சி
மாநகராட்சியில் குடிநீர் திருட்டை தடுக்கும் வகையில் 10,000க்கும் மேற்பட்ட இடங்களில் நீரழுத்த கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தும் பணி தீவிரம்;
ஈரோடு மாநகராட்சியில் குடிநீர் திருட்டை தடுக்கும் வகையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நீரழுத்த கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இதன் வாயிலாக, சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் வீடுகள் தோறும் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், குழாய் உடைப்பு மற்றும் கசிவு காரணமாக, தண்ணீர் விரயமாவதை தடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. அதேசமயம், பெரும்பாலான வீடுகளில் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் திருடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இவ்வாறு மின் மோட்டார் மூலம் உறிஞ்சப்படும் தண்ணீர், மேல்நிலை தொட்டிகளில் தேக்கி வைக்கப்படுகிறது.இதனால், பொது குழாய்களில் போதுமான அளவு தண்ணீர் வருவதில்லை. பலர் பாதிப்பு அடைகின்றனர். ஒரு வீட்டில் மின் மோட்டார் மூலம் குழாயில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டால், அருகே இருக்கும் வீட்டு குழாய்களில் தண்ணீர் சென்றடைவதும் கிடையாது. எனவே, வீடுகள் தோறும், நீரழுத்த கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், நீரழுத்த கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சில வீடுகளில், மின் மோட்டார் மூலம் உறிஞ்சப்படும் தண்ணீர், மேல்நிலை தொட்டிகளில் தேக்கி வைக்கப்படுகிறது. இதனால், பொது குழாய்களில் போதுமான அளவு தண்ணீர் வருவதில்லை. பலர், பாதிப்பு அடைகின்றனர். மேலும் ஒரு வீட்டில் மின் மோட்டார் மூலம் குழாயில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டால், அருகே இருக்கும் வீட்டு குழாய்களில் தண்ணீர் வருவதும் கிடையாது. சீராக தண்ணீர் வினியோகிக்கப்பட்டாலும், இத்தகைய அத்துமீறல் தொடர்கிறது. இதனால், வீடுகள்தோறும், நீரழுத்த கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நீரழுத்த கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.