ஓய்வு பெற்ற காவலர்குடும்பத்தாருடன் க முன்னாள் டிஜிபி

எனக்கு தமிழ் தெரியாது: இவர்களுக்கு இந்தி தெரியாது:- எங்களுக்குள் இருந்த அன்பு மொழியால் 40 ஆண்டுகளாக ஒரே குடும்பமாக இணைந்து பயணிக்கிறோம்:- மயிலாடுதுறையில் ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குநர் நெகிழ்ச்சி:-;

Update: 2025-04-06 14:33 GMT
  • whatsapp icon
தமிழ்நாடு காவல்துறையில் 1986-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி மணிமுத்தாறு 9-வது பட்டாலியனில் 1200 பேர் காவலர் பயிற்சி முடித்தனர். இவர்களில் சில நூறு பேரைத் தவிர எஞ்சிய அனைவரும் ஓய்வுபெற்று தங்கள் குடும்பத்தினருடன் ஓய்வுகாலத்தை கழித்து வருகின்றனர். இவர்கள் தாங்கள் பயிற்சி நிறைவு செய்தததை ஆண்டுக்கொரு முறை நினைவூட்டிக் கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் சந்திப்பு நிகழ்;ச்சியை கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இதுவரை மணிமுத்தாறு, தஞ்சாவூர், சேலம், கன்னியாகுமரி, மதுரை ஆகிய 5 இடங்களில் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். (இடையில் சில ஆண்டுகள் கொரோனா ஊரடங்கு காரணமாக இச்சந்திப்பு நிகழவில்லை.) இந்நிலையில், 6-வது குடும்ப சந்திப்பு விழா மற்றும் காவலர் பயிற்சிமுடித்த 40-வது ஆண்டு துவக்க விழாவை மயிலாடுதுறை திரு இந்தளூரில் நடத்தினர். இவர்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஊரில் சந்தித்துக் கொள்ளும்போதும், தாங்கள் பயிற்சி முடித்த ஆண்டில் எஸ்.பியாக பணியாற்றி, காவல்துறை இயக்குநராக ஓய்வுபெற்ற அனுப்ஜெய்ஸ்வால்-க்கு அழைப்பு கொடுத்து, அவரும் அனைத்து சந்திப்பிலும் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டுள்ளார். அந்த வகையிலும் ஓய்வுபெற்ற டிஜிபி அனுப்ஜெய்ஸ்வால் தனது துணைவியாருடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில், அரக்கு நிற சட்டை, வேட்டி, துண்டு என சிவில் உடையில் கலந்துகொண்ட 300-க்கு மேற்பட்ட போலீசார், ஓய்வுபெற்ற டிஜிபி அனுப்ஜெய்ஸ்வாலை மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் முன்பிருந்து, இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அமர்த்தி, நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் காவலர்கள் தங்கள் கொண்டாட்டத்தை தொடர்ந்தனர். இன்று மீண்டும் நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்துக்கு தனது துணைவியாருடன் வந்த ஓய்வுபெற்ற டிஜிபி அனுப்ஜெய்ஸ்வாலுக்கு, பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, 9-வது பட்டாலியனில் பயிற்சி பெற்று பணியாற்றி வந்து பணியின்போது உயிரிழந்த போலீஸாரின் உருவப்படத்துக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, ஓய்வுபெற்ற டிஜிபி அனுப்ஜெய்ஸ்வாலின் 71-வது நட்சத்திர பிறந்தநாள் விழா இன்று நடைபெறுவதையொட்டி, அனைத்து போலீசாரும் தம்பதி சமேதராய் அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வுபெற்ற டிஜிபி அனுப்ஜெய்ஸ்வால் கூறுகையில், எனக்கு தமிழ் தெரியாது, இவர்களுக்கு இந்தி தெரியாது. இருப்பினும் எங்களுக்குள் இருந்த அன்பு மொழியால் 40 ஆண்டுகளாக ஒரே குடும்பமாக இணைந்து பயணிக்கிறோம். இங்கிருந்து சென்ற பிறகு டெல்லி, காஷ்மீர், அஸ்ஸாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு பணி காரணமாக இடம் பெயர்ந்து சென்றுவிட்டேன். இருந்தாலும் எங்கள் அன்பு மாறவில்லை என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Similar News