குமரி மாவட்டம் பனச்சமூடு பகுதியை சேர்ந்தவர் சசி. இவர் பனச்சமூடு பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் ஊழியர் ஆக வேலை செய்து வருகிறார். சம்பவ தினம் சசி தியேட்டருக்கு வரும் வாகனங்களை பார்க்கிங்கில் நிறுத்தும்படி அறிவுறுத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள திருமண மண்டத்துக்கு செல்ல வேண்டிய ஆட்டோவை தியேட்டர் பார்க்கிங்கில் நிறுத்தியுள்ளனர். இதை கண்ட சசி அங்கு திரைப்படம் பார்க்க வரும் வாகனங்களை தான் நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அறிந்து சம்பந்தப்பட்ட திருமண மண்ட உரிமையாளரும் மேல்புறம் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் செயலாளருமான ராமன் (50), அவரது மகன் சம்பு மற்றும் அக்ஷய் குமார் (49) ஆகியோர் தியேட்டர் வந்து, சசியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கினார். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திரையரங்கு உரிமையாளர் மணிகண்டன் (35) என்பவர் அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தியேட்டர் ஊழியரை தாக்கிய முன்னாள் பா ஜ செயலாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.