ராமநாதபுரம் பங்குனித் திருவிழா திருவிழா நடைபெற்றது
பரமக்குடியில் பங்குனி திருவிழாவில் இந்து பக்தர்களுக்கு குடிதண்ணீர் வழங்கிய இஸ்லாமியர்கள்.;
ராமநாதபுரம் மாவட்டம்பரமக்குடி முத்தாலம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு வண்டி மாகாளி ஊர்வல வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் விழா கமிட்டியாளர்களுக்கு மரியாதையும், பக்தர்களுக்கு குடிதண்ணீரும் இஸ்லாமியர்கள் வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு பங்குனித் திருவிழா ஏப்ரல் 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 4 ஆம் நாள் விழாவான பரமக்குடி சின்னக்கடை தெரு வன்னியகுல சத்திரிய மகாசபை சார்பில் வண்டி மாகாளி ஊர்வல வைபவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட மாட்டுவண்டியில் விரதம் மேற்கொண்ட பக்தர் காளி வேடம் அணிந்து வண்டியில் அமர்ந்தவாறும்,10 க்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் பெண் வேடம் அணிந்து வண்ண உடைகளில் நின்று நடனம் ஆடியபடியும் சென்றனர். நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்ற வண்டி மாகாளி ஊர்வலம் சின்னக்கடை தெரு மண்டகப் படியினை சென்றடைந்தது. ஸ்ரீ முத்தால பரமேஷ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யபட்டு தீபாரதனைகள் நடந்தன. பரமக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் வண்டி மாகாளி ஊர்வல வைபவத்தை கண்டு தரிசித்தனர். அப்போது மாட்டு வண்டியில் வேடமிட்டு நடனமாடி வரும் நிலையில் கீழபள்ளிவாசலை கடந்து செல்லும்போது கீழபள்ளிவாசல் நிர்வாகிகள் விழா கமிட்டியாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்கின்றனர். பள்ளிவாசலை கடந்து செல்லும்போது மேளதாளங்கள் வாசிக்காமல் அமைதியாக சாமி ஊர்வலம் கடந்து செல்கிறது. தொடர்ந்து இஸ்லாமியர்கள் இந்து பக்தர்களுக்கு குடிதண்ணீரும் வழங்குகின்றனர். இந்த நிகழ்ச்சி மதத்தை மறந்து இந்துக்கள், இஸ்லாமியர்களின் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.