சுசீந்திரம் அருகே உள்ள இலந்தையடி விளையைச் சார்ந்தவர் சுடலைமணி (50). இவர் தெங்கம்புதூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் வரி வசூலுக்கும் வேலை செய்து வருகிறார். நேற்று தனது இருசக்கர வாகனத்தில் வட்டவிளையில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் கையெழுத்து போட்டு விட்டு, தெங்கம்புதுர் செல்வதற்காக பறக்கை தனியார் திருமண மண்டபம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது குறுக்கே நாய் பாய்ந்துள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுடலைமணி பலத்த காயமடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனிக்காமல் சுடலைமணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் ஆகாஷ் (25) கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.