உயிரிழந்த மயிலுக்கு தேசியக்கொடி போர்த்தி அஞ்சலி
ஈரோடு அருகே நெகிழ்ச்சி சம்பவம் மின் மாற்றியில் அடிபட்டு உயிரிழந்த மயிலுக்கு தேசியக்கொடி போர்த்தி அஞ்சலி செலுத்திய மக்கள்;

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வெண்டிபாளையம் பகுதியில், ரெயில்வே நுழைவு பாலம் அருகே இருக்கும் மின் மாற்றி (டிரான்ஸ்பார்மர்) மீது நேற்று இரவு மயில் ஒன்று வேகமாக பறந்து வந்து மோதியது. அந்த மின் மாற்றி மீது மோதிய வேகத்தில் தீப்பொறி பறக்க மிகுந்த சத்தத்துடன் மயில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தது.மின்மாற்றியில் தீ பொறியுடன் ஒரு சில நொடிகள் மின்சாரம் தடைப்பட்டு மீண்டும் வந்தது. மின்மாற்றி அருகே வசித்து வந்த பொதுமக்கள் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தனர்அப்போது பெரிய மயில் ஒன்று மீன் மாற்றி மீது மோதி உயிரிழந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து சம்பவம் குறித்து உடனடியாக ஈரோடு வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். வழக்கம்போல பொதுமக்கள் இது போன்ற சம்பவங்கள் நடந்தால் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் கூறிவிட்டு அவரவர் வேலையை பார்க்க சென்று விடுவார்கள். அதற்கு நேர் மாறாக, இந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தது மட்டுமின்றி, உயிரிழந்து கிடப்பது நமது தேசிய பறவை என்பதால், அதற்கு உரிய மரியாதை செலுத்தும் விதமாக இறந்து போன மயில் உடலில் முதலில் துணியை போர்த்தி அதற்கு மேல் தேசிய கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் வனத்துறையினரிடம் மயிலின் உடல் ஒப்படைக்கப்பட்டது.