பேராவூரணியில் வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்;

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அண்ணா சிலை அருகில் வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வக்ஃப் சட்ட திருத்த மசோதா முஸ்லிம்களின் சொத்துக்களை பறிக்கும் நோக்கில் ஒன்றிய அரசால் கொண்டு வரப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிராகரித்து ஒன்றிய அரசு மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மனித நேய ஜனநாயக கட்சி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.சலாம் தலைமை வகித்தார். மஜக மாவட்டச் செயலாளர் அதிரை சேக் வரவேற்றார். மாநில துணைசெ செயலாளர் கோட்டை ஹாரீஸ் கண்டன முழக்கமிட்டார். ஆர்ப்பாட்டத்தில், சிறுபான்மையினருக்கு எதிராக வக்ஃப் சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்கும் வக்ஃபு திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும், இஸ்லாமியர்கள் மீது தொடர்ந்து வெறுப்புணர்வை கக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாநிலச் செயலாளர் நெய்வேலி இப்றாகிம், சமூக செயற்பாட்டாளர் சத்திய பிரபு செல்வராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் திமுக ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், தமிழக மக்கள் புரட்சிக் கழக மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஆறு.நீலகண்டன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் , மார்க்சிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், , மதிமுக, தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் நகர பொறுப்புக்குழு உறுப்பினர் அசாருதீன் நன்றி கூறினார்.