கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிப்பு : தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு
தஞ்சாவூர் மாநகராட்சி;

கட்டுப்பாட்டு அறை மூலம் மாநகராட்சியின் செயல்பாடுகள் கண்காணிப்பில், தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சியை ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் வெள்ளிக்கிழமை தெரிவித்தது: தஞ்சாவூர் மாநகரில் குடிநீர், புதை சாக்கடை குழாய்கள் உடைதல், குப்பைகள் அகற்றாதது, தெரு விளக்குகள் எரியாதது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணித்து தீர்வு காணப்படுகிறது. மேலும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் நீர் இருப்பும் கண்காணிக்கப்பட்டு, தடையில்லாமல் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக தேசிய அளவில், ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் மதிப்பீடு செய்தது. இதில், தஞ்சாவூர் மாநகராட்சி தேசிய அளவில் 14 ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளது. இதற்காக தஞ்சாவூர் மாநகராட்சிக்கு ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் விரைவில் விருது வழங்கவுள்ளது. மேலும், கட்டுப்பாட்டு அறையிலுள்ள 1800 425 1100 என்கிற கட்டணமில்லா தொலைபேசி மூலமும் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக 300 அழைப்புகள் வருகின்றன. கடந்த ஓராண்டில் ஏறக்குறைய 11 ஆயிரம் அழைப்புகள் வந்ததில், 80 விழுக்காடு தீர்வு காணப்பட்டது. மாநகரில் பொது இடங்களில் மொத்தம் 550 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் தற்போது 246 கேமராக்கள் இயங்கி வருகின்றன. மீதமுள்ள 304 கேமராக்கள் மின் இணைப்பு, கம்பம் அமைப்பது உள்ளிட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இயங்கவில்லை. இவற்றை இயக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மாநகரில் குற்றச் செயல்களும் குறைந்துள்ளன" என மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார். அப்போது, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மண்டலக் குழுத் தலைவர்கள் டி.புண்ணியமூர்த்தி, எஸ்.சி.மேத்தா, ரம்யா சரவணன், பொறியாளர் சாம் ஸ்டெல்வின் ஆகியோர் உடனிருந்தனர்.