கோவை: அம்பேத்கர் பிறந்தநாள் - வானதி சீனிவாசன் மரியாதை !
கோவை வடகோவையில் உள்ள மத்திய உணவுக் கிடங்கில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மாலை அணிவித்து நேற்று மரியாதை செலுத்தினார்.;
கோவை வடகோவையில் உள்ள மத்திய உணவுக் கிடங்கில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மாலை அணிவித்து நேற்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். பாஜக சார்பில் மூன்று விதமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நேற்று மாநிலம் முழுவதும் அம்பேத்கர் சிலைகள் உள்ள இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தீப விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று ஒவ்வொரு பகுதியிலும் அம்பேத்கர் உருவப்படத்திற்கு பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. கோயம்புத்தூர் மாநகர் மாவட்டத் தலைவர் தலைமையில், மாநில துணைத் தலைவர் பேராசிரியர் கனகசபாபதி, நீலகிரி பாராளுமன்ற பொறுப்பாளர் நந்தகுமார், பட்டியல் சமுதாய அணியின் மாநில பொதுச் செயலாளர் ரங்கராஜ் ஆகியோர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஏப்ரல் 15 முதல் 20 ஆம் தேதிக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரங்கக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அந்தக் கூட்டங்களில், அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கர் அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி இழைத்த துரோகங்கள், நேருவின் அவமதிப்பு, பாஜக அரசு அவருக்குச் செய்த மரியாதைகள் ஆகியவை குறித்து விளக்கப்படும். அம்பேத்கர் பிறந்த இடம், அவர் படித்த லண்டன், அவர் உயிர் நீத்த இடம், தீக்ஷா பூமி, எரியூட்டப்பட்ட இடம் ஆகிய ஐந்து இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைத்து, அவரது புகழை பாஜக அரசு உலகிற்கு எடுத்துச் செல்கிறது. நரேந்திர மோடி, அம்பேத்கர் பெயரில் பணப் பரிமாற்ற செயலி, சர்வதேச மையம் ஆகியவற்றை அமைத்துள்ளார். பாரத ரத்னா விருதும் பாஜக ஆட்சியில் வழங்கப்பட்டது. பட்டியல் இனத்தைச் சார்ந்த முக்கிய நபர்கள், தொழிலதிபர்கள், சமுதாயத் தலைவர்கள் இந்தக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளனர். கோயம்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில், சாலைகள் மோசமாக உள்ளதைச் சுட்டிக்காட்டி பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்றத்தில் முன்வைத்துள்ளேன். அரசு உடனடியாக பணிகளைத் தொடங்குவதாக உறுதியளித்துள்ளது. தேர்தலுக்காக வேலை செய்யாமல், மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். புதிய மாநிலத் தலைவர் நியமனம்: புதிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுக ஆட்சியில் அமைச்சராகப் பணியாற்றியவர். புதிய நபரிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். அவரது பணி சிறக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவோம். பாஜக ஜனநாயக ரீதியாகச் செயல்படும் கட்சி. அண்ணாமலை சிறப்பாகச் செயல்பட்டார். புதிய தலைவரும் சிறப்பாகச் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார்.