கோவை: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி !
கோவை மாநகர காவல் துறை தனது 35-வது ஆண்டு பவள விழாவையொட்டி ஒரு பகுதியாக, சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மாநகர போலீசார் நேற்று 5 கிலோ மீட்டர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.;
கோவை மாநகர காவல் துறை தனது 35-வது ஆண்டு பவள விழாவை கொண்டாடி வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக, சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மாநகர போலீசார் நேற்று 5 கிலோ மீட்டர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கோவை மாநகர காவல் துறையின் பவள விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, பொதுமக்கள் - போலீஸ் நல்லுறவு கிரிக்கெட் போட்டி உள்ளிட்டவை அடங்கும். இதன் தொடக்கமாக, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று காலை தொடங்கியது. மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். அவரும் போலீசாருடன் இணைந்து பேரணியாக நடந்து சென்றார். இந்த பேரணி ரேஸ்கோர்ஸ் வழியாக சென்று காவல் பயிற்சி வளாகத்தில் நிறைவடைந்தது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு வாக்கத்தானில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.