ஜனவரி மழையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

பருவம் தவறிய மழையினால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிருக்கு நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு வழங்காததை கண்டித்து, சங்கரன்பந்தல் கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள்  கைது;

Update: 2025-04-15 12:49 GMT
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு கனமழை காரணமாக சம்பா பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டது. பருவம் தவறிய மழை காரணமாக கடந்த ஜனவரி மாதம் 17,18 தேதிகளில் பெய்த கன மழையால் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட எரவாஞ்சேரி, இலுப்பூர் உத்திரங்குடி எடுத்துக்கட்டி சாத்தனூர், திருவிளையாட்டம், கொத்தங்குடி, அரசூர், விளாம் உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் முற்றிலும் மூழ்கி சேதமடைந்தன. சேதமடைந்த பயிருக்கு பயிர் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை. தமிழக அரசு நிவாரணமும் வழங்காத நிலையில் பயிர் காப்பீடு பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு வழங்கப்படாததை கண்டித்து இலுப்பூர் சங்கரன்பந்தல் கடை வீதியில்  விவசாயிகள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தரங்கம்பாடி மயிலாடுதுறை சாலையில் அமர்ந்து விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பயிர் நிவாரணம் வழங்காததை தன கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர். இதனை அடுத்து காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறையில் வைத்தனர். தொடர்ந்து வருவாய் துறையினர் மற்றும் வேளாண் துறையினர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயிகளை புறக்கணிக்கும் போக்கில் நடந்து கொள்வதாக அப்பொழுது விவசாயிகள் குற்றம் சுமத்தினர்.

Similar News