சோலூர் பிக்கைகண்டி கிராமத்தில் இரவு நேரத்தில் உலா வரும் ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சம்...

வனத்துறையினர் கண்காணிக்க பொதுமக்கள் கோரிக்கை;

Update: 2025-04-18 14:02 GMT
சோலூர் பிக்கைகண்டி கிராமத்தில் இரவு நேரத்தில் உலா வரும் ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சம்... நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டம் ஆகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக யானை, சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்புக்குள் உலா வர துவங்கியுள்ளது. இவ்வாறு வரும் வனவிலங்குகள் குடியிருப்புகளையும், விளை நிலங்களையும் சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி உள்ளது. இந்நிலையில் உதகையை அடுத்த சோலூர் பிக்கைகண்டி கிராமத்தில் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக காட்டு யானை ஒன்று விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒற்றைக் காட்டு யானை இரவு நேரங்களில் உலா வருவது தெரிய வந்துள்ள நிலையில் அக்கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அக்கிராமத்தில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு ஒற்றைக் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News