கண்மாயில் தண்ணீர் திறந்து விடக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு
விவசாயத்திற்கு கண்மாயில் தண்ணீர் திறந்து விடக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது;
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள பிரமனூர், வயல்சேரி, வாடி கிராமங்களில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 100 ஏக்கரில் நெல் மற்றும் 200 ஏக்கரில் பருத்தி பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் உள்ள முக்கிய நீர்மூலமான பிரமனூர் கண்மாயில் தற்போது தண்ணீர் இல்லை. கோடைக் கால மழையால் வைகை ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகள் பொதுப்பணித்துறைக்கு மனு அளித்ததைத் தொடர்ந்து, தட்டான்குளம் தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர், வலது பிரதான கால்வாய் வழியாக பிரமனூர் கண்மாய்க்கு ஏப்ரல் 16ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில், பிரமனூர் கிராமத்தைச் சேர்ந்த சில நபர்கள், சமூக விரோத கும்பலின் உதவியுடன், திருப்புவனம் புதூரிலிருந்து பிரமனூர் கண்மாய்க்கு செல்லும் கால்வாயின் ஷட்டர்களை மூடிவிட்டு, தண்ணீர் செல்லாமல் தடுப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், கண்மாயில் உள்ள மீன்களை அரசு அனுமதியின்றி தனிநபரிடம் பல லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு பிடிக்க முயற்சி செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால், விவசாயிகளின் பயிர்கள் கருகும் நிலை ஏற்படக்கூடியதாக உள்ளது. எனவே, கண்மாய்க்கு தண்ணீர் திறக்க ஆவணப்படுத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்திடம் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மனு அளித்துள்ளனர்