காஷ்மீர் தாக்குதல் எதிரொலி எஸ்.பி.சுஜாதா வாகன சோதனையை பார்வையிட்டு ஆய்வு
காஷ்மீர் தாக்குதல் எதிரொலி ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு;
காஷ்மீர் அருகே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 27 =க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் இந்த தாக்குதல் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டு ரயில் நிலையம், பஸ் நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தீவிர வாகன சோதனையும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழிபாட்டுத்தலங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு இரண்டாவது நாளாக தீவிர வாகன சோதனை நடைபெற்றது. ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா மாவட்ட எல்லையான பவானி லட்சுமி நகர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் நேரில் வந்து தீவிர வாகன சோதனை பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த வழியாக வந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டு அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் போன்ற விவரங்களையும் கேட்டறிந்தார்.