கோபிசெட்டிபாளையம் அருகே தொழிலாளி பலி
கோபிசெட்டிபாளையம் அருகே பரிதாபம் கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி;
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே சுண்டக்காம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (37). கூலித் தொழிலாளி. நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கிணற்றை சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றுவதற்காக செடிகளை வெட்டி கொண்டிருந்தார். அப்போது கிணற்றின் விளிம்பின் அருகே உள்ள தேக்கு மரத்தில் ஏறி கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார். அருகில் இருந்த மற்றொரு கிளையை வெட்டும்போது எதிர்பாராத விதமாக ராஜசேகர் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கினார். கிணற்றில் 40 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து நம்பியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தனசேகரை தேடினர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தனசேகர் உடல் மீட்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டது. இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.