மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற இலுப்பைத்தோப்பு சின்ன மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் பலரின் குலதெய்வமாக விளங்கும் இக்கோயிலின் சித்திரை திருவிழா கடந்த 16 ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவின் சிகர விழாவான 28-ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் இன்று நடைபெற்றது. இதையொட்டி, சக்தி கரகம் மற்றும் விரதம் இருந்து காப்பு கட்டிய ஏராளமான பக்தர்கள் மயிலாடுதுறை காவிரிக் கரையிலிருந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க வீதி உலாவாக கோயிலை வந்தடைந்தனர். வழியெங்கும் மக்கள் தங்கள் வீடுகளின் முன்பு சக்தி கரகத்திற்கு தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கோயிலின் முன்பு அமைக்கப்பட்ட தீக்குழியில் சக்தி கரகம் மற்றும் பக்தர்கள் இறங்கி தீமிதித்து தங்கள் நேர்த்தி கடனை பூர்த்தி செய்தனர். மேலும், அலகு காவடி எடுத்தும் பக்தர்கள் தீ மிதித்தனர். இதில் பல பக்தர்கள் தங்கள் குழந்தைகளின் தோளில் சுமந்தவாறு தீமிதித்து அம்மனுக்கு தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதி திருவிழாவை கண்டு தரிசனம் செய்தனர். கண்கவர் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது.