காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை

ஆறுமுகநேரியில், காதல் மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2025-04-26 08:31 GMT
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி நடராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் வேல் என்ற நாகவேல். இவரது மகன்கள் இசக்கி ராஜா, முத்துக்குமார் (31). கூலித்தொழிலாளி. முத்துக்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுகநேரி அருகே உள்ள மூலக்கரையைச் சேர்ந்த சிவரஞ்சனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். முத்துக்குமாருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குமார், மனைவி, குழந்தைகளுடன் திருப்பூர் சென்று குடியேறினார். அங்குள்ள பணியன் கம்பெனி ஒன்றில் அவர் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கும் அடிக்கடி கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம் போல், கடந்த 22-ந் தேதியும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த முத்துக்குமார், வீட்டை விட்டு வெளியேறி ஆறுமுகநேரி வந்து, தாய் வேலம்மாள் வீட்டில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் வேலம்மாள் பூக்கடைக்கு சென்றுள்ளார். வீட்டில் முத்துக்குமார் தனியாக இருந்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த வீட்டுக்கு சகோதரர் இசைக்கி ராஜாவும், உறவினர் ஒருவரும் சென்றுள்ளனர். அப்ேபாது வீட்டில் உள்ள படுக்கையறையில் முத்துக்குமார் தூக்குப் போட்டு பிணமாக தொங்கியுள்ளார். பதறிப்போன அவர் கொடுத்த தகவலின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் அந்த வீட்டுக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News