சத்தியமங்கலம் மைசூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு

பண்ணாரி அம்மன் சோதனை சாவடி தடுப்பில் கண்டெய்னர் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு;

Update: 2025-04-27 13:21 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பன்னாரி அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் மலைப்பாதை தொடங்கும் இடத்தில் போலீஸ் -வனத்துறை சார்பில் சோதனை சாவடி உள்ளது. திம்பம் மலைப்பாதை 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. இது தமிழக -கர்நாடகா எல்லை என்பதால் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. குறிப்பாக சரக்கு லாரிகள் போக்குவரத்து அதிக அளவில் நடந்து வருகிறது. திம்பம் மலைப்பாதை வழியாக அனுமதிக்கப்பட்ட அளவை மீறி பாரங்களை ஏற்றி வரும் வாகனங்களை கண்டறியும் வகையில் ஆசனூர் மற்றும் பண்ணாரி சோதனை சாவடியில் இரும்பினால் ஆன தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் நுழையும் வாகனங்கள் உயரமான மற்றும் அகலமான பாரங்களை ஏற்றி வந்தால் செல்ல முடியாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவையிலிருந்து கர்நாடகா மாநிலத்திற்கு சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று பண்ணாரி சோதனை சாவடி தடுப்பு கம்பியில் சிக்கிக் கொண்டது. இதன் காரணமாக அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. இதனால் தமிழக -கர்நாடக இடையே சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரம் போராட்டத்துக்கு பிறகு லாரியை அங்கிருந்து நகரத்தினர். இதன்பின்னர் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

Similar News