கோவை: புதிய சாலையால் வீடுகளுக்குள் புகும் மழை நீர் !
நெடுஞ்சாலை துறையால் அமைக்கப்பட்ட புதிய சாலையால் கடும் இன்னல்களை சந்திக்கும் மக்கள்.;
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே பதுவம்பள்ளி ஊராட்சி, கோவில்பாளையம் செல்லும் சாலை சந்திப்பில் நெடுஞ்சாலைத் துறையினரால் புதிதாக அமைக்கப்பட்ட சாலை, அப்பகுதி மக்களுக்கு பெரும் இன்னலை ஏற்படுத்தியுள்ளது. பழைய சாலையை விட சுமார் 2 அடி உயரமாக கட்டப்பட்டுள்ளதால், மழைநீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பெய்த கனமழையின் காரணமாக, இந்த சாலை சந்திப்பில் சுமார் 3 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது. இதனால், 50-க்கும் மேற்பட்ட வீடுகளைச் சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்து வெளியேற வழியின்றி குளம் போல் காட்சியளித்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். புதிய சாலை அமைத்ததில் எங்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், சாலையை இவ்வளவு உயரமாக போட்டதால் மழைநீர் எங்கள் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இரவு முழுவதும் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டோம். வயதானவர்கள், குழந்தைகள் என அனைவரும் மிகவும் சிரமப்பட்டோம், என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக சாலையை சீரமைத்து, மழைநீர் வடிய வழி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.