கோவை: கைமாறிய காதலி-கொலையில் முடிந்த காதலன் கதை !
கோவையில் கல்லூரி மாணவரை கொன்று விட்டு போதையில் பிணத்துடன் கொலையாளிகள் தூங்கியது விசாரணையில் தெரியவந்து உள்ளது.;
வெள்ளலூர் குப்பை கிடங்கு அருகே கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டிடத்தில் கடந்த 11-ம் தேதி அடையாளம் தெரியாத வாலிபர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். போத்தனூர் போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சூர்யா என்பது தெரியவந்தது. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. சூர்யாவுக்கும், அவரது நண்பர் கார்த்திக்கின் காதலிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், தனது நண்பர்களான மாதேஷ், முகமது ரஃபி, நரேன் கார்த்திக் ஆகியோருடன் சேர்ந்து சூர்யாவை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த 8-ம் தேதி கோவைக்கு வரவழைக்கப்பட்ட சூர்யாவுக்கு, கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் அதிகளவில் மது கொடுத்துள்ளனர். மேலும், போதை ஊசியும் செலுத்தியுள்ளனர். மயக்கமடைந்த சூர்யாவை கை, கால்களை கட்டி தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளனர். கொலையாளிகள் குடிபோதையில் இருந்ததால், சூர்யாவின் உடலை என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே படுத்து தூங்கியுள்ளனர். அதிகாலையில், காரில் சடலத்தை ஏற்றி வெள்ளலூர் பகுதியில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த கொலை வழக்கில் கார்த்திக், மாதேஷ், முகமது ரஃபி, நரேன் கார்த்திக் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது விசாரணை செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கைமாறிய காதலியால் ஏற்பட்ட விபரீதம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.