கொட்டி தீர்த்த கனமழை... வறண்ட வைகை ஆற்றில் நீர் வரத்து தொடங்கும் வாய்ப்பு உருவாகி உள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி

கன மழை;

Update: 2025-05-19 11:19 GMT
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வழக்கத்திற்கு முன்பாகவே தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கிய போதும் வெப்பத்தின் தாக்கம் குறையாததால், பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது இந்த நிலையில் வைகை ஆறு நீர்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, சிங்கராஜபுரம், முருக்ககோடை தும்மக்குண்டு வாலிப்பாறை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியதால் மழைநீர் சாலைகளில் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். அதே நேரத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த மழையால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கனமழையால் வருசநாடு சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் குளிர்ந்த காற்றும் வீசியதால் வெப்பத்தில் தவித்து வந்த மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழையின் காரணமாக வறண்டு காணப்படும் வைகை ஆற்றில் நீர் வரத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News