சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை;
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை இமெயிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறது. இது வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது . இதனையடுத்து அதிகாரிகள் சேலம் மாநகர காவல் துறைக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினவு இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டார் . இந்த மிரட்டலையொட்டி உடனே வெடிகுண்டு நிபுணர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதி முழுவதும் மெட்டல் டிடெக்டர் சோதனை செய்தனர். வெடிகுண்டு பிரிவு காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் இந்த சோதனை நடந்தது. இது தவிர போலீஸ் மோப்பநாய் ரூபி அழைத்து வரப்பட்டு சோதனை நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதி மற்றும் வாகனங்கள் நிறுத்தும் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்தியில் வெடிகுண்டோ மற்ற வெடிபொருளோ ஏதும் சிக்கவில்லை . இருப்பினும் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என சேலம் டவுன் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.