நகைக்கடன் பெறுவது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளை

நிறுத்தி வைக்க வலியுறுத்தி சிவசேனா கட்சி கையெழுத்து இயக்கம்;

Update: 2025-05-22 07:04 GMT
சிவசேனா கட்சி மாநில தலைவர் ரவிச்சந்திரன், மாநில பொது செயலாளர் சுந்தரவடிவேலன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது நகைக்கடன் பெறுவது தொடர்பாக, இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் மற்றும் அறிவிப்புகள் ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கும், விவசாயிகளுக்கும், சிறு தொழில் முனைவோர்களுக்கும் சம்மட்டியால் அடித்த அடி போல் இருக்கிறது. இது போன்ற அறிவிப்புகள், நகைக்கடன் பெறுவதற்கு சாமானியர்கள் வங்கி பக்கமே வரக்கூடாது என்று திட்டமிட்டு செயல்படுவது போல் இருக்கிறது. ஏழை எளிய, நடுத்தர மக்கள் பெரும்பாலும் நகைகளை அன்பளிப்பாகவோ, சீராகவோ, பரம்பரை பரம்பரையாக வைத்துக் கொள்வதாகவோ, மொய் விருந்துகளில் பெறப்பட்டதாகவோ தான் இருக்கும். ஒரு சாமானியன் சேமிக்கும் பணத்திலிருந்து புதிய நகைகளை வாங்கி அதன் ரசீதுகளை சேமித்து வைக்கும் பழக்கம் இல்லாதவனாகவே இருக்கிறான். பெரும்பாலும், ஒரு வீட்டில் நகை வாங்கியதற்கான ரசீதுகளையோ, மற்ற பொருட்கள் வாங்கியதற்கான ரசீதுகளையோ பாதுகாத்து வைப்பதற்கான மனநிலை, சூழ்நிலை தற்போது பெரும்பாலான இந்தியர்களிடத்தில் இல்லை. இவ்வாறு இருக்கும் போது, நகைக்கடன் பெறுவதற்கு, நகை உரிமம் சம்பந்தமான சான்று தேவை என்பது மிகப்பெரிய அநீதியாகவே சாமானியர்களால் பார்க்கப்படுகிறது. தற்போது, பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சூழலில், விவசாய வேலைகள் விரைவில் தொடங்க வேண்டிய சூழலில், நகைக்கடன் பெறுவதற்கு இவ்வாறான புதிய அறிவிப்புகளை, விதிமுறைகளை வெளியிட்டு இருப்பது மிகப்பெரிய மரண அடியாக, தடைக்கல்லாக பொதுமக்கள் உணர்கிறார்கள். எனவே, மத்திய அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, ரிசர்வ் வங்கி சமீபத்தில் நகைக்கடன் பெறுவது தொடர்பாக வெளியிட்டுள்ள அனைத்துc அறிவிப்புகளையும் உடனடியாக நிறுத்தி வைத்து, கடந்த ஆண்டு வரை எந்த மாதிரியான நடைமுறை இருந்ததோ, அதே நடைமுறைகளை தொடர்ந்து ரிசர்வ் வங்கி.கடைபிடிக்க ரிசர்வ் வங்கிக்கு வலியுறுத்த வேண்டும். விரைவில் ரிசர்வ் வங்கி நகைக்கடன் பெறுவது தொடர்பாக வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளை, அறிவிப்புகளை எதிர்த்து, பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Similar News