ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் முக்கனி திருவிழா
மதுரை அருகே இன்று ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் முக்கனி திருவிழா நடைபெற்றது;
மதுரை திருப்பரங்குன்றம் அருகே திருநகர் பகுதியில் அமைந்துள்ள உச்சி கருப்பண சுவாமி திருக்கோவிலுக்கு முக்கனி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வைகாசி அமாவாசை முடிந்த பிறகு வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம்., இந்தாண்டு முக்கனி திருவிழா ஹார்விபட்டி பகுதியில் உள்ள கோவில் பெட்டி இருக்கும் இடத்திலிருந்து சாலை வழியாக திருநகர் பகுதியில் உள்ள உச்சி கருப்பணசுவாமி கோவில் வரை ஆயிரக்கணக்கில் முக்கனிகளை பக்தர்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் அங்கு சாமி சன்னதியில் உச்சி கருப்பண சுவாமிக்கு பக்தர்கள் கொண்டுவந்த முக்கனிகளான மா, பலா, வாழை பழங்களை சுவாமி முன்பு குவியலாக படைத்தனர். மேலும் 7 அடி உயர மாலையை சுவாமிக்கு சூடி, பத்தி, சூடம் ஏற்றி தீபாரதனை காட்டினார்கள். அங்கு ஏராளமான ஆண் பக்தர்கள் திரண்டு பயபக்தியுடன் சாமியை வழிப்பட்டனர். இதனையடுத்து., சாமிக்கு படைக்கப்பட்ட பழங்களை ஒவ்வொரு ஆண் பக்தர்களுக்கும் டஜன் கணக்கில் பிரசாதமாக வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தை கோவிலை விட்டு வெளியே கொண்டு செல்லக் கூடாது என்ற ஐதீகம். இந்த முறையை பாரம்பரியமாக கிராம மக்கள் 600 ஆண்டு களுக்கும் மேலாக பின்பற்றுவதால் கோவிலுக்கு வந்திருந்த ஆண் பக்தர்கள் தங்களால் முடிந்த அளவு சாப்பிட்டனர். முக்கனி திருவிழாவில் நாதஸ்வரம், மேளம், கொட்டடிக்க கூட கூடாது எனவும் பாரம்பரிய கிராம வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.