திருமங்கலத்திற்கு குறைவான பேருந்துகள் இயக்குவதால் பயணிகள் அவதி.
மதுரை சோழவந்தானிலிருந்து திருமங்கலத்திற்கு குறைவான பேருந்துகளை இயக்குவதால் பயணிகள் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.;
மதுரை மாவட்டம் சோழவந்தானிலிருந்து திருமங்கலத்திற்கு குறைவான பேருந்துகள் இயக்குவதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக மதிய நேரங்களில் இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக பேருந்து இல்லாததால் பேருந்து நிலையத்தில் பல மணி நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக கூறுகின்றனர். மேலும் இரவு ஒன்பது மணிக்கு மேல் திருமங்கலத்திற்கு முறையான பேருந்து வசதி இல்லாததால் செக்கானூரணி உசிலம்பட்டி திருமங்கலம் மற்றும் வெளியூர் செல்லும் பயணிகள் மதுரை ஆரப்பாளையம் காளவாசல் ஆகிய பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து திருமங்கலம் உசிலம்பட்டிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால் சுமார் இரண்டு முதல் மூன்று மணி நேரம் தாமதமாவதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாவதாக கூறுகின்றனர். பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து திருமங்கலத்திற்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.