விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
பெரம்பலூர் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு தலைமையில் நடைபெற்றது.;
பெரம்பலூர் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு தலைமையில் இன்று (30.05.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்தார்கள். ராமராஜன் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் அடிகிணறு வெட்ட வழிவகை செய்ய வேண்டுமென்றும், கொட்டரை நீர்தேக்கத்தில் மாற்றுப்பாதை அமைத்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். ராஜீ மானாவாரி பயிர்களுக்கு கோடை உழவு மானியம் கூடுதலாக வழங்க வேண்டுமெனவும், அனைத்து நீர் நிலைகளிலும் நில அளவை செய்து தூர்வார வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். கருணாநிதி லாடபுரம் பகுதியில் அரசு மருத்துவமனையை சுற்றி சீரமைத்து தர வேண்டுமென கேட்டுக்கொண்டார். ராஜா மக்காச்சோளத்திற்கு பயிர் காப்பீட்டுத் தொகையை அதிகப்படுத்தி விரைவில் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். செந்தில்குமார் அரும்பாவூர் பகுதியில் குடிதண்ணீர் கிணறு உள்ள பகுதியில் சீரமைத்து தர வேண்டுமென கேட்டுக்கொண்டார். வரதராஜன் அனைத்து கிராம விவசாயிகளுக்கும் விடுபாடின்றி பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். ரமேஷ் நெல் மற்றும் மக்காச்சோளத்திற்கு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையை கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். ரகு பாடாலூர் மேம்பால பணிகளை துரிதப்படுத்தி போக்குவரத்து இடர்பாடுகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். ஏகே.ராஜேந்திரன் கரும்பிற்கான வெட்டுக்கூலி அதிகமாக உள்ளதால் ஊக்கத் தொகையினை அதிகப்படுத்த வேண்டுமெனவும், வீடு கட்டி குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். செல்லதுரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பெரம்பலூரில் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தினை துரிதப்படுத்தி குடிதண்ணீர் முறையாக வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். விவேகானந்தன் அரும்பாவூர் பேரூராட்சியில் கழிவு நீர் தேங்கி உள்ளதால் பாலம் சீரமைக்க வேண்டுமெனவும், சதாசிவ அணைக்கட்டு சீரமைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். மணி மங்கூன் பகுதியில் சாலை சீரமைத்து தர வேண்டுமெனவும், பொம்மனப்பாடி ஏரி வாய்க்கால் தூர்வாரி சீரமைக்கவும், வேலூர் அரசு மருத்துவமனை அருகில் நிழற்குடை அமைத்து தர வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். ஜெயராமன் பெரம்பலூர் மாவட்டத்தில் ஜமாபந்தி சிறப்பாக நடைபெற்றதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அனைத்து அரசு பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென கேட்டுக்கொண்டார். நீலகண்டன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்படும் நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாத்து விவசாயிகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அரும்பாவூர் பெரிய ஏரியில் ஏற்பட்ட உடைப்பினை சீர் செய்யும் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார். அனைத்து விவசாய சங்கத் தலைவர்களும், நகைக்கடன் பெறுவதற்கு ஒன்றிய அரசு அறிவித்த புதிய விதிகள் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் எதிரானதாக உள்ளதால் உடனடியாக அதை திரும்ப பெற்று பழைய விதிமுறைகளையே நடைமுறை படுத்த வேண்டும் எனவும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விவசாய இலவச மின் இணைப்பினை வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்கள். அனைவரின் கோரிக்கைகளையும் கேட்டறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களை உடனுக்குடன் பதில் அளிக்க உத்தரவிட்டதன் அடிப்படையில், அலுவலர்கள் விவசாயிகளுக்கு பதிலுரைகளை வழங்கினர். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது: கடந்த மாத கூட்டத்தில் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கிய அனைத்து விவசாயிகளுக்கும் உரிய விளக்கம் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களால் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, இந்த மாத கூட்டத்தில் பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கான தீர்வும், உரிய பதிலும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களால் வழங்கப்படும். பயிர் காப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தனலெட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சாக்கடை சீரமைப்பு பணிகள், பட்டா வழங்குதல், மின் இணைப்பு, நீர் நிலைகள் சீரமைப்பு பணிகள் போன்ற கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். பொதுத்தகவல்கள்: பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மி.மீ, ஆகும். 2025 மே மாதம் பெய்ய வேண்டிய மழையளவு 57.00 மி.மீ., பெய்த மழையளவு 105.73 மி.மீ, ஆகும். 2025 மே மாதம் வரை பெய்ய வேண்டிய மழையளவு 125 மி.மீ., பெய்த மழையளவு 164.65 மி.மீ, ஆகும். விதை கொள்முதலை பொறுத்தவரை விவசாயிகள் பயன்பாட்டிற்காக நெல்லில் 23.65 மெ.டன்களும், சிறுதானியங்களில் 7.196 மெ.டன்களும், பயறு வகைகளில் 1.139 மெ.டன்களும், எண்ணெய்வித்து பயிர்களில் 7.056 மெ.டன்கள் இருப்பில் உள்ளது. இக்கூட்டத்தில் சார் ஆட்சியர் சு.கோகுல்வேளாண்மை இணை இயக்குநர் செ.பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வே.)பொ.ராணி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் க.பாண்டியன், மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.