அலையன்ஸ் ஏர் நிறுவனம் சார்பில் பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக கொச்சிக்கும், மறுமார்க்கமாக கொச்சியில் இருந்து சேலம் வழியாக பெங்களூருக்கும் விமானம் இயக்கப்படுகிறது. அதேபோன்று இண்டிகோ நிறுவனம் சார்பில் தினமும் மாலையில் சென்னையில் இருந்து சேலத்துக்கும், மறுமார்க்கமாக சேலத்தில் இருந்து சென்னைக்கும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் ஐதராபாத்தில் இருந்து சேலத்துக்கும் மறுமார்க்கமாக சேலத்தில் இருந்து ஐதராபாத்துக்கும் விமானம் இயக்கப்படுகிறது. சேலம் விமான நிலையத்தில் விமான சேவையை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தாண்டு மார்ச் மாதம் வரை ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 132 பயணிகள் பயன்பெற்றுள்ளனர். இதனால் இந்த விமான நிலையம் 3-ம் தரத்தில் இருந்து 2-ம் தரத்திற்கு உயர்ந்துள்ளதால் பயன்படுத்துவோர் வளர்ச்சி கட்டணம் பயணி ஒருவருக்கு ரூ.193-ல் இருந்து ரூ.656 ஆக உயர்ந்துள்ளதாக விமான நிலைய நிர்வாகிகள் தெரிவித்தனர். சேலம்-சென்னைக்கு விமான கட்டணம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4,500 வரை வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் ரூ.6,700 வசூலிக்கப்பட்டது. நேற்று ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரையிலும் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. சேலம்-சென்னை விமான சேவை மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதனால் காலை நேரத்தில் சேலம்-சென்னை மற்றும் சென்னை-சேலம் இடையே விமான சேவை தொடங்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட விமான நிலைய நிறுவனத்துக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் விமான சேவை தொடங்கப்படும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் தமிழகத்தில் மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கும், மும்பை, கொல்கத்தா, புதுடெல்லி போன்ற சர்வதேச விமான நிலையங்களுக்கும் விமான சேவை தொடங்க வேண்டும் என தொழிலதிபர்கள் கோரிக்கை விடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.