பூந்தமல்லியில் பலத்த காற்றால் இரும்புக்கூரை பறந்து விழுந்து கார், வீடு சேதம்.

பூந்தமல்லியில் பலத்த காற்றால் இரும்புக்கூரை பறந்து விழுந்து கார், வீடு சேதம்.;

Update: 2025-06-10 06:03 GMT
கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடுமையான வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்த நிலையில் மாலை பூந்தமல்லி, நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த திடீர் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து சுற்றுச்சூழல் குளுமையானதைத் தொடர்ந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட தந்தை பெரியார் நகர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியின் மாடியில் போடப்பட்டிருந்த இரும்பு தகர செட் இரும்பு கம்பத்துடன் அப்படியே பெயர்ந்து கொண்டு சில மீட்டர் தூரம் பறந்து வந்து அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் மீது விழுந்தது. இதில் சில வீடுகளின் சுவர்கள், ஏ.சி.பெட்டி உள்ளிட்டவை சேதம் அடைந்தன. மேலும் அந்த இரும்பு தகர செட் பறந்து வந்து விழுந்ததில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் அப்பளம் போல் நொறுங்கியது. பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்சார வயர்களும் அறுந்து தொங்கின. இதனால் பூந்தமல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நேரம் மின்சாரம் தடை செய்யப்பட்டது. இந்த சம்பவத்தின் போது பொதுமக்கள் யாரும் வெளியே இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News