சங்கரன்கோவில் அருகே மனைவியை கொலை செய்ததாக கணவா் கைது

மனைவியை கொலை செய்ததாக கணவா் கைது;

Update: 2025-06-17 01:33 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள சின்னகோவிலான்குளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் முத்துப்பாண்டியன் (38). மேலநீலிதநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி முத்துக்குமாரி (28). இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியைச் சோ்ந்த இளைஞருடன் முத்துக்குமாரிக்கு பழக்கம் ஏற்பட்டு, அவருடன் சென்றிருந்தாராம். பின்னா் 4 மாதங்கள் கழித்து மீண்டும் முத்துப்பாண்டியனுடன் சோ்ந்து வாழ்ந்து வந்தாராம். இருப்பினும் முத்துக்குமாரியின் நடத்தையில் முத்துப்பாண்டியனுக்கு சந்தேகம் இருந்ததாம். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு குடும்பத் தகராறில் முத்துக்குமாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக சின்னகோவிலான்குளம் காவல் நிலையத்துக்கு முத்துப்பாண்டியன் தகவல் கொடுத்தாா். போலீஸாா் அங்கு வந்து முத்துக்குமாரியின் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். கூறாய்வில், முத்துக்குமாரி மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்ததாக தெரியவந்தது. இதைத் தொடா்ந்து முத்துப்பாண்டியனிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். அவா், தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததும், பின்னா் உடலை தூக்கில் தொங்கவிட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடா்பாக சின்னகோவிலான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துப்பாண்டியனை கைது செய்தனா்.

Similar News