புதிய விரிவான சிற்றுந்து திட்டம்
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தை தொடங்கி வைத்தார்;
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், தலைமையில், புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தை, திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் இன்று மதியம் 12.30 மணியளவில் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி கிராமத்தில் வசிக்கின்ற பொதுமக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தி வருகிறார். அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள விடியல் பயணத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இத்திட்டத்தின் மூலம் பெண்கள் சுமார் 33 கோடி பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். பெண்களின் முன்னேற்றத்திற்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், புதிய விரிவான சிற்றுந்து திட்டம் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. புதிய மற்றும் நீட்டிக்கப்பட்ட வகையில் 29 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா, வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன், சிற்றுந்து உரிமையாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.