டாஸ்மார்க் அருகே ஒருவர் உயிரிழப்பு உறவினர்கள் சாலை மறியல்
டாஸ்மார்க் அருகே ஒருவர் உயிரிழப்பு உறவினர்கள் சாலை மறியல்;
திருச்செங்கோடு நாகர்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் மணி தறித் தொழிலாளி. இவருக்கு சாந்தி என்ற மனைவியும் பூவரசி, நர்மதா என்ற திருமணமான இரண்டு மகள்களும், அஜித்குமார் என்ற திருமணமாகாத மகனும் உள்ளனர். இறந்து போன மணி இன்று அதிகாலை திருச்செங்கோடு எஸ் என் டி ரோடு, மார்க்கெட் செல்லும் வழியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை எண் 5993அருகே இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து அவரது உறவினர்கள் மணியின் உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இரவு வீட்டிலிருந்து வெளியே வந்தவர் மார்க்கெட் அருகே உள்ள 5993 என்ற எண் கொண்ட மதுபான கடையில் மது வாங்கி குடித்துள்ளார். இதில் அதிக போதையின் காரணமாகவோ, அல்லது வேறு எந்த காரணம் என தெரியாத நிலையிலோ மணி உயிரிழந்துள்ளார்.இது குறித்து மணியின் மகனும் உறவினர்களும் மார்க்கெட் வியாபாரிகளும் அந்த 5993 என்ற எண் கொண்ட மதுபான கடையில் இரவு நேரங்களில் அரசு மதுபானம் இல்லாமல் வேறு கலப்பட மதுபானங்கள் விற்கப்படுவதாக சந்தேகம் இருப்பதாகவும் மார்க்கெட் செல்லும் வழியில் இந்த கடை அமைந்திருப்பதால் பொதுமக்களுக்கு இடையூறு இருப்பதாகவும் அந்த கடையை உடனடியாக மூட வேண்டும்இரவு நேரத்தில் மதுபானம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்செங்கோடு எஸ் என் டி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி உடனடியாக விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய விசாரனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. இந்த சாலை மறியலால் திருச்செங்கோடு நாமக்கல் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட நாட்களாகவே அந்த 5993 மதுபான கடை மூடப்பட வேண்டும் என பொதுமக்கள், மார்க்கெட் வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வரும் நிலையில் இது போன்ற அசம்பாவிதம் நடந்த பிறகாவது மதுபான கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இது குறித்து செய்தியாளரிடம் பேசிய இறந்து போன மணியின் மகன் அஜித்குமார் மற்றும் அவரது நண்பர் கோபிநாத் ஆகியோர் கூறியதாவது. அந்த மதுபான கடையில் தொடர்ந்து இதே போல் மர்மமான முறையில் நான்கு பேர் இறந்துள்ளனர். அரசு அனுமதித்த நேரம் மட்டுமல்லாது அனைத்து நேரங்களிலும்24 மணி நேரமும் அங்கே மதுபானம் விற்கப்படுகிறது.மேலும் இரவு நேரங்களில் கலப்பட மது விற்கப்படுகிறது என்கிற சந்தேகம் எங்களுக்கு உள்ளது எனவே அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு அரசு அனுமதித்த நேரம் தவிர மற்ற நேரங்களில் மதுபானம் விற்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்கள்.