போக்குவரத்திற்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்துள்ள கால்நடைகள்.

பழையசீவரம் சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிவதை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்;

Update: 2025-06-19 13:31 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் - செங்கல்பட்டு சாலையில் பழையசீவரம் கிராமம் உள்ளது. பழையசீவரம் சுற்றி விவசாயம் சார்ந்த பகுதி என்பதால் ஏராளமானோர் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்லும்போதும், வீடு திரும்பும் போதும் பழையசீவரம் பிரதான சாலையை கடந்து செல்கின்றன. அச்சமயங்களில் சிறிது நேரம் போக்குவரத்து இடையூறு உள்ளது. எனினும், கால்நடை பராமரிப்போரில் பலர், கால்நடைகளை எந்த நேரமும் நெடுஞ்சாலையில் விட்டு விடுகின்றனர். இதனால், சாலையில் நடந்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பழையசீவரத்தில் கைவிடப்பட்ட சர்க்கரை ஆலை எதிரிலான சாலை, மலை பேருந்து நிறுத்தம், நரசிம்ம சுவாமி கோவில் எதிர்ப்புறம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி எதிரே உள்ள சாலைகளில் கால்நடைகள் இரவு, பகலாக சுற்றி திரிகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே, பழையசீவரம் சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிவதை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News