டூவீலர் மோதி மூதாட்டி பலி ஆக்கிரமிப்பால் தொடரும் உயிரிழப்புகள்
குமாரபாளையத்தில் டூவீலர் மோதி மூதாட்டி பலியான சம்பவத்தில், ஆக்கிரமிப்பால் உயிரிழப்புகள் தொடர்ந்து வருகிறது.;
குமாரபாளையம் அருகே உள்ள காவேரி நகர் பகுதியைச் வசித்து வந்தவர் லட்சுமி, 75. கணவர் பல ஆண்டுகள் முன்பே இறந்து விட்டதால், குழந்தைகள் ஏதும் இல்லாமல் தனித்து வாழும் இவர், குமாரபாளையம் நகராட்சி பூங்காவில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் மாலை 04.50 மணியளவில், டீ குடிக்க நகராட்சி பூங்காவை விட்டு வெளியே சென்றார். அப்போது புளியம்பட்டி பகுதியில் இருந்து வேகமாக வந்த டூவீலர், கட்டுப்பாட்டை இழந்து மூதாட்டி மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட லட்சுமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டூவீலரில் வந்த குமாரபாளையம் அருகே புள்ளாக்கவுண்டம்பட்டியை சேர்ந்த, டிரைவர் தொழில் செய்யும் கதிர், 20, மணிகண்டன், 19, இளைஞர்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர். கதிர் டூவீலரை ஓட்டி வந்துள்ளார். இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மூதாட்டி லட்சுமி உயிரிழப்புக்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளே காரணம் என்றும், இந்தப் பகுதியில் உள்ள சாலை ஆக்கிரப்புகளை அகற்றுகிறோம் என்று கூறிக்கொண்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் விட்டதால் தினசரி ஏதோ ஒரு விபத்து ஏற்பட்டு வருகிறது. குமாரபாளையம் எடப்பாடி சாலையில் ஆக்கிரப்புகளை அகற்றி மனித உயிர்களை காக்க வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்