பராமரிப்பின்றி பொலிவின்றி காணப்படும் டேவிஸ் பூங்கா...
பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து காணப்படும் அவலம்...;
பராமரிப்பின்றி பொலிவின்றி காணப்படும் டேவிஸ் பூங்கா... பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து காணப்படும் அவலம்... சுற்றுலா பணிகளுக்கு போதிய விளம்பரம் ஏற்படுத்தி இப்பூங்காவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை... மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெற்றுள்ள மாவட்டமாகும். குறிப்பாக உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். மேலும் உதகை நகராட்சி கட்டுப்பாட்டில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள டேவிஸ் பூங்கா கடந்த 2023 ஆம் ஆண்டு சுமார் 91 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புணரமைக்கப்பட்டது. இப்பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழ விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்று, நடந்து செல்ல ஏதுவாக நடப்பாதை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் போதிய பராமரிப்பு இல்லாததாலும், சுற்றுலா பயணிகளுக்கு போதிய விளம்பரம் இல்லாததால் சுற்றுலா பயணிகள் இன்றி விளையாட்டு உபகரணங்கள் மழையில் நனைந்து சேதமடைந்து வருகிறது. அதேபோல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பிடம் போதிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் இப்பூங்காவை சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் விளம்பரப்படுத்தி சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க வேண்டும், பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.