ஒத்தக்கடை அருகே மரம் நடும் விழா
மதுரை ஒத்தக்கடை அருகே மரம் நடும் விழா நடைபெற்றது;
சர்வதேச வெப்ப மண்டல தினத்தை முன்னிட்டு யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 221 ஆவது வார மரக்கன்றுகள் நடும் விழா ஒத்தக்கடை ஸ்ரீ கிருஷ்ணா அவென்யூ அரசு பூங்காவில் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நேற்று (ஜூன்.29)நடைபெற்றது. யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் ராகேஷ் முன்னிலை வகித்தார். ஆலோசகர் ஸ்டெல்லா மேரி வரவேற்றார். உறுப்பினர் பாலமுருகன் தொகுத்து வழங்கினார். தலைமை ஆசிரியர் தென்னவன் அவர்கள் ' வெப்பமண்டல பகுதிகளின் பன்முகத்தன்மையை மற்றும் அவர்களின் தனித்துவமான சவால்கள் மற்றும் வாய்ப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. உலகின் மொத்த நிலப்பரப்பில் 40 சதவீதம் வெப்ப மண்டல காடுகள் ஆகும். தோராயமாக உலகில் 80 சதவீதம் பல்லுயிர் தன்மையும் கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றில் பல்லுயிர் தன்மையும் வெப்ப மண்டல காடுகள் கொண்டுள்ளன என்றார். பூங்காவில் உள்ள மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டன. நிகழ்விற்கு தேவையான நிலவேம்பு, கடம்பம், புங்கை, நீர் மருது மரம், மகிழம் மரக்கன்றுகளை இளம் மக்கள் இயக்கம் நிறுவனர் சோழன் குபேந்திரன் தானமாக வழங்கினார். ஸ்ரீ கிருஷ்ணா அவென்யூ பொறுப்பாளர்கள் மரங்களுக்கு தேவையான வலைகளை வழங்கினர். 10க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. மரங்களுக்கு பராமரிப்பு பணியும், கவாத்து பணியும் நடைபெற்றது. நீர் ஊற்றப்பட்டது. மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம், இயற்கையைக் காப்போம்' என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. விழாவில் யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர்கள் , உறுப்பினர்கள், மீனாட்சி தட்டச்சு பயிலகம் நிறுவனர் ஜெயபாலன் மற்றும் உறுப்பினர்கள் வெண்பா, அரிய நட்சத்திரா, கபிலன், மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா அவென்யூ நலச்சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், வங்கி ஊழியர்கள், அரசு பணியாளர்கள் கலந்து கொண்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் கைகளால் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்வில் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு களப்பணி செய்தனர். மாணவி கீர்த்தி ஶ்ரீ நன்றி கூறினார்.