பெற்றோரை இழந்த பெண்ணுக்கு தந்தையாக நின்று திருமணத்தை நடத்தி வைத்த பத்திரவுத்துறை தலைவர் செயலுக்கு குவியும் பாராட்டு
பாராட்டு;
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே ரெட்டவயல் பகுதியை சேர்ந்த கண்ணையா- செல்வி தம்பதி. இவர்களின் மூத்த மகள் பாண்டிமீனா, நர்சிங் படித்தவர். இரண்டாவது மகள் பாண்டிஸ்வரி, கண்ணையா நுரையீரல் பாதிப்பாலும், செல்வி சிறுநீரக பாதிப்பாலும் அடுத்தடுத்து இறந்தனர். இதில் நிலைகுலைந்து போன பாண்டிமீனா, கடந்த 2022 ஆம் ஆண்டு தஞ்சாவூர் ஆட்சியராக, (தற்போது பத்திரப்பதிவுத்துறை தலைவர்) இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை, நேரில் சந்தித்து, தான் வசிக்கும் வீட்டின் புகைப்படத்துடன், தனது நிலையை எடுத்துக்கூறி உதவி கேட்டார். பாண்டிமீனாவின் நிலையை உணர்ந்து கொண்ட தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2.40 லட்சம் ரூபாய், தன் விருப்ப நிதியில் இருந்து 1.50 லட்சம் ரூபாய், தன்னார்வலர்கள் மற்றும் பேராவூரணி லன்யஸ் கிளப் சார்பில் சுமார் 1.50 லட்சம் ரூபாய் என நிதியுதவி மூலம், வீடு ஒன்றை கட்டி, 2022 ஆம் ஆண்டில், பாண்டிமீனாவிடம் புதிய வீட்டில் குத்துவிளக்கு ஏற்றி ஒப்படைத்தார். அதன் பிறகு பாண்டிமீனா மற்றும் அவரது சகோதரி பாண்டிஸ்வரி இருவரையும், தனது மகள்களை போல நினைத்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்து வந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பேராவூரணியில், பாண்டிமீனாவுக்கும், அபிமன்யு என்பவருக்கும் , தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தனது செலவில் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார். அப்போது, "இவளை மகளாகவே நினைத்து வளர்த்தேன், நல்லபடியாக பார்த்துக்கொள்" என மணமகனிடம் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதும், பாண்டிமீனா உட்பட அனைவரையும் ஆனந்தக்கண்ணீரில் ஆழ்த்தியது. அவரின் செயலை பலரும் பாராட்டினர். இந்திருமண விழாவில், தன்னார்வலர்கள் முகமதுரபி, அமல் ஸ்டாலின் பீட்டர், பேராவூரணி லயன்ஸ் சங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டனர். இதுகுறித்து பாண்டிமீனா கூறியதாவது: என் பெற்றோர் மறைந்த பின், என்னையும் என் தங்கையையும் தனது குழந்தைகள் போலவே கவனித்துக்கொண்டார். தஞ்சாவூர் ஆட்சியராக இருந்தபோதும், தற்போது பத்திரப் பதிவுத்துறையில் தலைவராக இருந்தாலும், எங்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறார். குடிசை வீட்டு வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து, புதிய வீடு கட்டிக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து என் திருமணத்தையும் தனது செலவில் நடத்தி வைத்தது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. எனது நம்பிக்கையாக மாறினார். எனது திருமணம் என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாததொரு நிகழ்வாகும்" இவ்வாறு அவர் கூறினார்.