பாஜக மாநிலத் துணைத் தலைவர் V.P. துரைசாமி இராசிபுரத்தில் பேட்டி ...

பாஜக மாநிலத் துணைத் தலைவர் V.P. துரைசாமி இராசிபுரத்தில் பேட்டி..;

Update: 2026-02-07 16:02 GMT
தமிழகத்தை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்ற மத்திய பட்ஜெட் வழிவகை செய்துள்ளது என்றும், மத்திய அரசின் நிதி உதவி திட்டங்களை, தமிழக அரசு, தொடர்ந்து பொதுமக்களிடம், மறைத்து வருகிறது என்றும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் V.P. துரைசாமி இராசிபுரத்தில் பேட்டியின்போது கூறினார்.. பாஜக மாநிலத் தலைவர்கள், மூத்த நிர்வாகிகள், மத்திய அரசின் 2026 நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு கிடைத்துள்ள பலன்கள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர். அதன்ஒருபகுதியாக, நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் V.P துரைசாமி, செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது கூறிய V.P. துரைசாமி, மத்திய அரசின் 2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையானது தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு, பெருவழிப் பாதையாக அமைந்துள்ளது. குறிப்பாக உள்கட்டமைப்பு, மருத்துவம், தொழில், சமூக நலன்களில் பல மாபெரும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய நிதிநிலை அறிக்கையில் கடந்த 5 ஆண்டுகளில் 22 ஆயிரத்து 873 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2025-26 ஆண்டில் மட்டும் 5 ஆயிரத்து 684 கோடி வழங்கப்பட்டது. தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் பெண்களின் பாதுகாப்பிற்காக 38 மாவட்டங்களிலும் தலா ஒரு மாணவிகள் விடுதி, தமிழகத்திற்கு 2 கேந்திரிய பள்ளிகள் ஆகியவை முக்கிய அம்சங்கள் ஆகும். விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவை புகுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாரத் விஸ்தார் திட்டத்தின் மூலம் வேளாண்மை தொழில், விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும். அதிக வருமானம் தரும் பயிர்களை ஊக்குவிக்க சிறப்பு உதவியும் வழங்கப்படும். தமிழக சுற்றுலா தலங்களுக்கு 18 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையை பொருத்தவரை மதுரையில் புதிய பன்முக சிறப்பு மருத்துவமனை அமைக்க 1500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் அறிவிக்கப்பட்ட 3 அகில இந்திய ஆயுர்வேத நிறுவனங்களில் ஒன்று, தமிழகத்தில் அமைய உள்ளது இந்த பட்ஜெட்டின் சிறப்பம்சமாகும். மேலும், புற்றுநோய் சிகிச்சை மையம், தொழில் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான உற்பத்தி மையங்கள் அமைக்கப்படுவதால், தமிழகத்திற்கு அனைத்து வழிகளிலும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது என்றும் கூறினார். அதேபோல CHIP மற்றும் காந்த உற்பத்திக்கு தேவையான சாலை வசதிகளை தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. PM மித்ரா ஜவுளி பூங்கா பணிகளை விரைந்து முடித்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பணிகளுக்காக 12 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ 2-ம் கட்டப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி விடுவிக்கப்பட்டுள்ளதோடு, சென்னை - பெங்களூர் - மைசூர் இடையே அதிவேக ரயில் திட்டத்திற்கான பணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அம்ரித் பாரத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்கள் புதுப்பொலிவு பெறும் என்பன உள்ளிட்ட திட்டங்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமாக அமையும் எனவும் கூறினார். மேலும் பிற கேள்விகளுக்கு பதில் அளித்து V.P. துரைசாமி, மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்காக பல நலத்திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ள போதிலும், தமிழக முதல்வர் உள்பட திமுக அரசு அதனை பொதுமக்களிடம் இருந்து மறைத்து, தமிழகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு, ஆளுங்கட்சி செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுவதற்கும், அரசு திட்டங்களை விரைவுப்படுத்துவதற்கும் அதிகாரம் உள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வெளிவராத புத்தகத்தை மேற்கோள் காட்டி சீன பிரச்னையை பேசுவதற்கு திடீரென்று முயன்ற போது, சபாநாயகர் அதற்கு அனுமதி தராதது நாடாளுமன்ற மரபு ஆகும். நாடாளுமன்றத்தை முடக்குகின்ற வகையில் எதிர்க்கட்சித் தலைவர் செயல்படுகிறார். நாடாளுமன்றத்தில், பிரதமருக்கு எதிராக மகளிர் உறுப்பினர்கள் மூலம், சட்டத்திற்கு முரணாக நடந்து கொள்வதாக காங்கிரஸ் முடிவெடுத்ததன் காரணமாக, சபாநாயகர் தமக்கு கிடைத்த அதிகாரப்பூர்வ தகவலின் அடிப்படையில், பிரதமரை சபைக்கு வர வேண்டாம் என கூறினார். இந்த விவகாரத்தில் சபாநாயகரின் கட்டளையை மீறி, கரூர், மயிலாடுதுறை உறுப்பினர்கள், பிரியங்கா காந்தி உள்ளிட்ட உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தது ஜனநாயக மரபுகளுக்கு எதிராக செயல்படுகின்றனர். இந்த செயலுக்கு, பாஜக சார்பில் வன்மையாக கண்டனம் தெரிவிக்கின்றோம். இதற்கு பதிலடி தருகின்ற வகையில், தேர்தல் நேரத்தில் அவர்களின் முகத்திரையை கிழிப்போம். சுதந்திரம் பெற்றது முதல் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டதில்லை. பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு யாரை கண்டும் பயம் கிடையாது. முத்தலாக் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் போன்ற பல்வேறு துணிச்சலான திட்டங்களை செயல்படுத்தியவர். ஈரான், ஈராக் பிரச்சனைகளுக்கும் தீர்வுகளை வழங்குகிறார். பிஜேபியில் இருப்பவர்கள் எதற்கும் யாருக்கும் பயப்பட மாட்டார்கள். அதற்கு அவசியமும் இல்லை. தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமானதால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டதை மாநில அரசால் தடுக்க முடியவில்லை. நாமக்கல் மாவட்டம் போதமலையில், 140 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியில் மத்திய அரசின் பங்களிப்பு 114 கோடி ஆகும். அங்கு மண் சாலை மட்டுமே அமைக்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக தார் சாலை அமைக்கப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியாகி இருப்பது ஏற்கத்தக்கது அன்று. நாமக்கல், லத்துவாடியில் ஆவின் பதப்படுத்தும் ஆலை முழுமையாக உள்கட்ட அமைப்புகள் செய்து முடிக்காமல், அங்கு உற்பத்தி நடைபெறாமல், அதனை அவசரகதியில் தேர்தலை மனதில் கொண்டு முதல்வர் திறந்து வைக்கிறார். மக்களுக்கு பயன்பெறக்கூடிய, பயன்பாட்டுக்கு வரக்கூடிய ஆலைகளை மட்டுமே முதல்வர் திறக்க வேண்டும். மொத்தம் 854 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள இராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பு 450 கோடி ரூபாய்க்குமேல் உள்ளது என்பதை திமுக அரசு பொதுமக்களிடம் மறைத்து, முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் இராசிபுரம் தொகுதியில் அமைச்சர் மதிவேந்தன் செய்துள்ள திட்டங்களை எடுத்து கூறிவிட்டு தேர்தலில் போட்டியிடட்டும். அவரது துறை மூலம், நல்ல அடிப்படை வசதி உள்ள விடுதியைகூட இராசிபுரத்தில் அவரால் அமைக்க முடியவில்லை. ஆதிதிராவிடர் பழங்குடியினர் குழந்தைகளுக்காக மத்திய அரசு அளித்துள்ள தொகையை நிர்வாக திறமையின்றி 3500 கோடி ரூபாயை திருப்பி அனுப்பிய 80 ஆண்டு கால ஒரு அரசு என்றால் அது தற்போதைய திமுக அரசு தான். 90 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்குவதாக தமிழ்நாடு முதல்வர் அறிவித்தார். திருப்பி அனுப்பிய தொகையை கொண்டாவது அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கியிருக்கலாம். போதமலை, மலை சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கு நபார்டு போன்ற அரசு துறைகள், கடன் மட்டுமே வழங்கியதாக கூறும் திமுகவினர், ஏற்கனவே 11 லட்சம் கோடி கடனை எங்கிருந்து பெற்றார்கள்? தனிநபர் ஒவ்வொருவருக்கும் சுமார் 3 லட்சம் கடன் சுமத்தியது தான் திமுகவின் சாதனையா? தேசிய கல்விக் கொள்கையை பல்வேறு மாநிலங்களும் ஏற்றுக் கொண்டு, அதற்கான நிதியைப் பெற்று, கல்வி கூடங்களை நடத்துகிறார்கள். ஆனால், இருமொழிக் கொள்கை பேசும் திமுக அரசு, தேசிய வளர்ச்சி கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழகத்திற்காக எதையும் கேட்டுப் பெறவில்லை. சேலம் இரும்பாலையை அன்றைய முதல்வர் கருணாநிதி, இந்திரா காந்தியிடம் கேட்டு பெற்றுத் தந்தார் ஆனால் இன்று மு.க ஸ்டாலின் அதுபோன்று எதையும் மத்திய அரசிடம் கேட்டுப் பெறுவதில்லை. திமுக மற்றும் அதன் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களும் எதையும் கேட்டுக் பெறுவதில்லை. அவர்கள் மத்திய அரசிடம் பேசியிருந்தால் இதுபோன்ற பிரச்சனை வந்திருக்காது. நீதிபதி சுவாமிநாதன், வழங்கிய நீதி பரிபாலனத்தில் ஆட்சேபனை இருந்தால் மேல்முறையீட்டுக்கு செல்லலாம். ஆனால் தமிழக முதல்வர் அதை விடுத்து, தனி மனித விமர்சனம் செய்து, அவரை பதவி நீக்கம் செய்ய இம்ப்ளிச்மென்ட் புகார் அளிக்க செய்துள்ளார். எனவே, சபாநாயகர் ஓம் பிர்லா, முதல் நிலை விசாரணை நடத்தி, இம்ப்ளிச்மென்ட் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று இந்த செய்தியாளர் சந்திப்பின் மூலம் சபாநாயகரை கேட்டுக்கொள்கிறேன். திமுக அரசு நிர்வாக திறமை இன்மை காரணமாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்பதால்தான், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன் கூட்டியே தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகிறார். அதில் தவறு ஒன்றும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. யூகத்தின் அடிப்படையில் NDA கூட்டணிக்கு தவெக வருமா என்று கூற முடியாது என்றும், ஒரு திரைப்படத்தில் வந்த வருமானத்தை மறைத்ததால்தான் அவருக்கு அபராதத்தை கட்ட வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழகத்தில், கனிமவள கொள்ளை அதிக அளவில் நடைபெறுகிறது. இராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையம் பில்லாநல்லூர் ஏரியில் குறிப்பிட்ட அளவைவிட அதிக அளவில் மண் அள்ளி உள்ளனர். இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுவாக தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுப் போய்விட்டது. ஆளும் திமுக அரசின் தவறுகளை ஊடகங்கள் தைரியத்துடன் வெளியிட வேண்டும் என்றும் இராசிபுரத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி. துரைசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, பாஜக சேதுராமன், அருள், லோகேந்திரன், தமிழரசு, சித்ரா, திவ்யா, உள்ளிட்ட மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News